நியூசிலாந்துக்குகெதிரான 5ஆவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 163 ரன் குவித்து அசத்தியுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி டி20 போட்டி மவுண்ட் மாங்கனுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் 12.30க்கு தொடங்கியது. இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோஹித் அணியை வழிநடத்தினார்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் , சஞ்சு சாம்சன் களமிறங்கினர். 5 பந்துகளே ஆடிய சஞ்சு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து கேப்டன் ரோஹித் களமிறங்கி ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர்.
அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 45 ரன்னில் ஆட்டமிழக்க ஷ்ரேயஸ் ஐயர்- ரோஹித் கூட்டணி ரன் வேட்டையை தொடங்கியது. அரைசதம் கடந்து அசத்திய ரோஹித் 60 ரன்னில் (Retired Hurt) ஆகி வெளியேற அவரை தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 6 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறைவு செய்தது. 20 ஓவர்களில்3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியின் ஷ்ரேயஸ் ஐயர் 33 ரன்னுடனும் , மனிஷ்பாண்டே 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் கமீஸ் பென்னட் 1 விக்கெட்டும் , ஸ்காட் குஃகெளிஜின் 2விக்கெட்டும் எடுத்தனர். 164 ரன் எடுத்து இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் 5 போட்டி தொடரில் 1 ஆறுதல் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.