நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலும் 3,862 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுதுவதற்கு 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து மட்டும் 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11,236 பேர் அரசு பள்ளி மாணவர்கள். தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட்தேர்வு அச்சம் காரணமாக 19 வயது தனுஷ் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான். மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு தனுஷ் வீட்டில் உள்ள முற்றத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு தாய் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.