நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு வருடமும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களை போன்றே 2022 ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமியர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
2022ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 6,000 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி வாயிலாக பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதன் காரணமாக அரசுக்கு 13 கோடியே 53 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.