இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நலத் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.
மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் ரூ.1.41 லட்சம் கோடியில் நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த பழைய வாகனங்களை திரும்பப்பெறும் கொள்கை அறிமுகம். நாடு முழுவதும் ஊட்டச்சத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகம். நாடு முழுவதும் 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். நீர்வளத் துறையில் ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டம் அறிமுகம்.