பள்ளி, கல்லூரி தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், இதர தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து வகையான தேர்வுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தேர்வு எழுதும் நபர் / வாசிக்கும் நபர் / ஆய்வக உதவியாளர் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்தின் பேரில் உதவியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். தேர்வு எழுதும் ஒருவரை உதவியாளராக நியமிக்கும் போது, அவர் வேகமாக தேர்வு எழுதுபவராக இருத்தல் வேண்டும்.
மாநில, மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளின் தேர்வுக்கு உதவிடும் வகையில், எழுதுபவர், வாசிப்பவர், ஆய்வக உதவியாளர் அடங்கிய ஒரு கமிட்டியை ஏற்படுத்த வேண்டும் கமிட்டியில் இருந்து யாரேனும் ஒருவரை சம்மந்தப்பட்ட மாற்றுத்திறனாளி தேர்வரே தேர்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். கணினி வழித் தேர்வை எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒரு நாள் முன்பே அதை சரிபார்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக உள்ள ஒருவரையே உதவியாளராக நியமித்தல் வேண்டும்.
வெவ்வேறு மொழிகளில் தேர்வு எழுதினால், ஒன்றுக்கு மேற்பட்ட உதவியாளரை பணியமர்த்திக்கொள்ளலாம். தேர்வில் மாற்றுத்திறனாளிகள் விரும்பினால் அவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டும் தேர்வறைகள், தேர்வு மையங்களில் சாய்தளம் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி கட்டாயம். தேர்வின் போது கால்குலேட்டர், பிரய்லி உபகரணங்களை மாற்றுத்திறனாளிகள் எடுத்து செல்லலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அறையில் தேர்வு நடத்த வேண்டும் தேர்வு நடத்தும் அனைத்து அமைப்புகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தேர்வு விதிமுறைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்