நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து பலரும் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து பிபின் ராவத் உடல் சூலூரிலிருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கிறது.
உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் இரவு 8 மணியளவில் டெல்லி சென்றடையும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இரவு 9 மணி அளவில் அஞ்சலி செலுத்துகிறார்.