பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலமாகவே ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாருக்கு பாஜகவோடு சுமூகமாக உறவு இல்லை. இந்நிலையில் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகி உள்ளார்.பீகார் மாநில ஆளுநர் பகு சவுகானை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கினார் நிதீஷ்குமார். அதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து லாலு பிரசாத்தின் (ராஷ்டிரிய ஜனதா தளம்) வீட்டிற்கு நிதிஷ்குமார் புறப்பட்டு சென்றுள்ளார்
ஏற்கனவே அவர் முன்கூட்டியே ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை, பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டார். ஆகவே தான் ஆளுநரை மாலை சந்தித்து ராஜினாமா கோரி இருக்கும் அதே நேரத்தில், நான் மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பதாகவும், இந்த முறை பாரதிய ஜனதாவுக்கு பதில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவு அளிக்கிறது என்பதை தெரிவித்துள்ளார்..
ஆகவே அடுத்தபடியாக மீண்டும் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என அவருடைய கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.ஆகவே அடுத்தபடியாக ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் முதலமைச்சர் ஆக ஆட்சி அமைத்து பதவி ஏற்க இருக்கிறார்.. ஓரிரு நாட்களில் பதவியேற்பு நடைபெறும் என தெரிகிறது.
நிதீஷ் குமார் பலமுறை மாறி மாறி பாரதிய ஜனதா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்பது பீகாரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் தற்போது பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் 2024 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பீகாரில் மொத்தமுள்ள 243 எம்எல்ஏக்களில் 160 பேரின் ஆதரவு ஐ.ஜ.க மற்றும் ஆர்.ஜே.டி கூட்டணிக்கு உள்ளது
தற்போதைய பீகார் அரசியல் களம் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என கேள்வி எழுந்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களை பாஜக கூட்டணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.