Categories
மாநில செய்திகள்

#BREAKING : புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடத்த மேலும் 4 மாத அவகாசம்… சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் புதிய மனு!!

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடத்த மேலும் 4 மாத அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் புதிய மனு அளித்துள்ளது.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 22ஆம் தேதி அட்டவணை வெளியிட்டது. இதையடுத்து பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த போவதில்லை என்று புதுச்சேரி அரசாங்கம் தெரிவித்திருந்தது..

மேலும் 5 நாட்களுக்குள் புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நவம்பர் 2, 7, 13 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் புதிய அட்டவணையை வெளியிட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி மாநில அமைப்பு செயலாளர் சிவா தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இட ஒதுக்கீடு குளறுபடியை சரி செய்ய அனுமதி தந்த நிலையில், இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்றது ஏன்? என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், மாநிலத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 21க்கு ஒத்திவைத்தனர். மேலும் இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வு பரிந்துரை செய்தது..

இந்த நிலையில் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடத்த மேலும் 4 மாத அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் புதிய மனு அளித்துள்ளது. இட ஒதுக்கீடு முறையை  அமல்படுத்தப்படவில்லை எனக்கூறி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |