சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார்..
ஸ்ரீ ரங்கம் கோவில் முன்பு இருக்கும் பெரியார் சிலை குறித்து பேசிய விகாரத்தில் நடிகர் கனல் கண்ணன் மீது பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கனல்கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்பு ஆஜரான போலீஸ் தரப்பு,கனல் கண்ணன் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், மேலும் அவருடைய பேச்சு என்பது இரு பிரிவினர் இடையே பலகை ஏற்படுத்தி வன்முறை தூண்டும் வகையில் உள்ளதாகவும் எனவே அவரை விசாரிக்க வேண்டியது கட்டாயம் என்பதால் அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என்றும் காவல்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கனல் கண்ணனுக்கு முன் ஜாமின் வழங்க முடியாது எனக் கூறி கனல் கண்ணன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து கூறிய சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்து வந்த கனல் கண்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.