பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் துறையைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான ராதாகிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை..
எனவே தொடர்ச்சியாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சூழலில் ஆலோசனை நடக்கிறது. போனமுறை கரும்பு கொடுத்ததால் அரசுக்கு கூடுதல் செலவு ஆனது. இந்த முறை அதே தொகைக்கு வாங்கலாமா மார்க்கெட்டில் ஒரு கரும்பு 35 ரூபாய் மேல் இருக்கிறது. போனமுறை 33 ரூபாய்க்கு வாங்கினர். ஏற்கனவே 2,300 கோடிக்கு மேல் செலவாகி இருக்கக்கூடிய நிலையில், கூடுதல் கரும்பு வழங்கினால் எவ்வாறு நிதி ஒதுக்குவது? 2.19 லட்சம் குடும்ப தாரர்கள் இருக்கிறார்கள்? எப்படி கொள்முதல் செய்து கொடுக்கலாம் என்று தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது, ஆலோசனை முடிவில் என்ன அறிவிப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தொகையைப் பொறுத்தவரை ஆயிரத்துக்கு மேல் கொடுக்க வாய்ப்பு இல்லை, தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதால் கரும்பு வழங்கினால் கூடுதலாக 80 கோடி ரூபாய் செலவாகும். எனவே அதற்கு பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது. தொடர்ச்சியாக அதிமுக, பாஜக மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கரும்பு வழங்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. நீதிமன்றத்தில் விவசாயி ஒருவர் தொடர்ந்த வழக்கு திங்கட்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.