பொங்கல் பரிசு தொகையுடன் கரும்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் துறையைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான ராதாகிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பொங்கல் பரிசு தொகை வழங்கும் நிகழ்வினை 2ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை..
எனவே தொடர்ச்சியாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக அதிமுக, பாஜக மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் கரும்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் விவசாயி ஒருவர் தொடர்ந்த வழக்கு திங்கட்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.