தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், நம்மை காக்க தடுப்பூசி ஒன்று மட்டுமே மிகப்பெரிய ஆயுதம் என்பதால் அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் மக்கள் அலட்சியமாக தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றன. பெரும்பாலானோர் இன்னும் முதல் தவணை தடுப்பூசி கூட திருத்திக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களை அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை விதித்து மாநகராட்சி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் ரேஷன் கடைகள், பள்ளிகள், திரையரங்குகள், டீக்கடைகள், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள் என பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது வேலூர் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.