வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீபா, தீபக் மனு அளித்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அதிமுக அரசு கடந்த ஆட்சியில் அறிவித்தது. இதையடுத்து வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது. இதற்கு எதிராக ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி “வேதா இல்லத்தை அரசுடமையாக்கப்பட்டதாக அறிவித்தது செல்லாது. இதற்கான அரசாணை ரத்து செய்யப்படுகிறது. மேலும் மூன்று வாரத்தில் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா ஏற்றும் தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும்.
போயஸ் தோட்டத்தை கையகப்படுத்த கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய 67 கோடியே 90 லட்சத்து 52,033 இழப்பீடு தொகையை அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீபா மற்றும் தீபக் மனு அளித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நகலை இணைத்து இந்த மனுவை அவர்கள் தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து தலைமை அரசு வழக்கறிஞருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என தீபா மற்றும் தீபக்கிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.