சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகரில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உத்தரவிட்டது. கடந்த 29ஆம் தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதையும் மீறி தற்போதுவரை 150க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் அந்த பகுதியில் வசித்து வரும் கண்ணையா என்பவர் தனது வீட்டை இடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் திடீரென்று மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது தீக்குளித்த கண்ணையா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறையை தமிழக அரசு நிறுத்துமா? என்று பலரும் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.