கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஐந்து நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கள்ளக்குறிச்சி சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு மாணவ அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினார். இதில் பல போலீசார்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவி மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில், ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சில் டிஐஜி உட்பட 20 போலீசார் காயமடைந்துள்ளனர்.