மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் வடக்கு மெயின் ரோட்டில் ராமச்சந்திரன் 40) என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். இவருடைய மகன் சிவபிரசாந்த் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சடையாண்டி மகள் சினேகா தனியார் நிறுவனத்தில் டேட்டா எண்டரி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரும் சிவபிரசாந்தும் ஒரே பகுதியில் வசித்து வருவதால் இருவரும் அடிக்கடி சந்தித்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி சிவபிரசாந்தும், சினேகாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சினேகா வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். இந்நிலையில் சினேகா தனது தந்தை சடையாண்டிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு “நான் சிவபிரசாந்தை திருமணம் செய்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார். அதன்பின் திடீர்நகர் காவல் நிலையத்தில் காதல் ஜோடியினர் தஞ்சம் அடைந்த நிலையில், இரு வீட்டாரையும் காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அப்போது சடையாண்டி என் மகள் இறந்துவிட்டாள். அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டுச் அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் சிவபிரசாந்தின் தந்தை ராமச்சந்திரன் இந்த திருமணத்தை தான் ஏற்றுக்கொண்டதோடு, புதுமணத் தம்பதிக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன் என்று காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார்.
அதனை தொடர்ந்து சடையாண்டி “நீ எப்படி இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்று ராமச்சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சடையாண்டி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டினார். இதனால் ராமச்சந்திரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமச்சந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சடையாண்டியை கைது செய்தனர்.