தமிழகத்தில் 82 நிறுவனங்கள் போலி சனிடைசர்களை தயாரித்து விற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கைகளை சானிடைசர் மூலமாக நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 82 நிறுவனங்கள் போலி சானிடைசர்களை தயாரித்து விற்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொரோனாவில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற மக்கள் பீதியில் இருக்கும் நிலையில் இதைப் பயன்படுத்திக் கொண்ட தரமற்ற மற்றும் போலி சானிடைசரை தயாரித்து விற்ற 82 நிறுவனங்களிடமிருந்து மருந்து கட்டுப்பாடு இயக்ககம் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறது.