தெற்கு வங்க கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. அதன்படி 5 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கனமழை காரணமாக பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்று மதியம் முதல் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து தற்போது தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கும் மிக அதிகமான மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.