தமிழகத்தில் பூத் ஸ்லீப் இல்லாவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமன்றி தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 88,937 வாக்குச் சாவடிகளில் 46,203 வாக்குச் சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இதுவரை ரூ.428.46 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பூத் ஸ்லீப் இல்லாவிட்டாலும் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.