திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்த வசீம் அக்ரம்(43) மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் முன்னாள் நகர சபை உறுப்பினராக இருந்தவர். மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலத் துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவரை, காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ,ஜீவா நகரில் வசித்து வரும் இம்தியாஸ், கஞ்சா விற்பனை செய்து வருவதாக வசீம் அக்ரம் தகவல் கொடுத்துள்ளார். அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இம்தியாஸ் கூலிப்படையை வைத்து வாசிம் அக்ரமை கொலை செய்துள்ளார். இதையடுத்து தப்பியோடிய 2 பேரை காஞ்சிபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அந்த வழக்கில் தஞ்சை நீதிமன்றத்தில் 6 பேர் சரணடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 6 பேர் தஞ்சை நீதிமன்ற நீதிபதி பாரதி முன் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கஞ்சா வியாபாரி இம்தியாஸ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.