மதுரை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் அனைத்து தெருக்களும் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்ததால், ஊரடங்கு குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் இன்னும் ஒரு சில நாட்களில் ஊரடங்கு அல்லது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் 20 வார்டுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கொரோனா அதிகரித்த அனைத்து தெருக்களும் மூடப்பட்டதாக மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் அறிவித்துள்ளார். இந்தத் தெருக்களில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாது. அதனைப் போலவே மற்றவர்களும் உள்ளே வரமுடியாது. மூடப்பட்ட தெருக்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.