தமிழகத்தில் மற்ற வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றி முதல்வர் முடிவு செய்வார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் தவிர்த்து மற்ற வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளிலும் ஷூசாக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேவைக்கேற்ப பணி ஆணை வழங்கப்படும். வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் அட்டவணை வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.