ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதைதொடர்ந்து பேரறிவாளன் விடுதலையானதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின் உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி சட்ட ஆலோசனை நடத்தி மற்ற ஆறு பேரையும் விடுவிக்க முயற்சி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மாநில அரசின் உரிமையானது பேரறிவாளனின் விடுதலை தீர்ப்பின் மூலம் கம்பீரமாக நிலைநாட்ட பட்டிருக்கிறது. மாநில அரசின் கொள்கை முடிவுகளில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என மாண்புமிகு நீதியரசர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். ஆளுநர்கள் செயல்படாத போது நீதிமன்றம் தலையிடும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர். மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக இதை பார்க்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.