தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியகுழு முதல்வர் முக ஸ்டாலின் உடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் பருவ மழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்துறை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வந்தது. இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்தனர். முதல் நாளான நேற்று முன்தினம் சென்னை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகளை பார்வையிட்டனர்.
பிறகு இரண்டாவது நாள் நேற்று மத்திய நிதி அமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையிலான குழுவினர், வேலூர் ராணிப்பேட்டை போன்ற இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மேலபுலம்புதூர் கிராமத்தில் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை மத்திய குழு ஆய்வு செய்தது. அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் 25 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. பின்னர் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் மழையால் பாதித்த பகுதிகளை ஆராய்ந்த ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழு மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள், நெற் பயிர்கள், கால்நடைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர் இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். பின்னர் டெல்லி சென்று மத்திய அரசிடம் தங்களது அறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் உரிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய குழுவிடம் முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.