தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிகைகளை முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதாவது, மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் இன்று முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மெட்ரோ ரயில் சேவை 31 ஆம் தேதி வரை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.