முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு நாளை உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்துவார் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இளைஞர் அணி செயலாளராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் நாளை பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜையில் கலந்து கொள்வார் என்றும், தேவருடைய நினைவிடத்திற்கு சென்று அந்த இடத்தில் மரியாதை செலுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இன்றைய தினம் முதலமைச்சர் முக ஸ்டாலின் செல்வதாக திட்டமிடப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக நேற்றைய தினம் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவர் இரண்டு மணி நேரம் பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பினார். தற்போது முதலமைச்சர் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருப்பதால் முதல்வர் பயணத்தை ரத்து செய்தார். அதற்கு பதில் மூத்த அமைச்சர் துரைமுருகன் கே.என் நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பசும்பொன் சென்று மரியாதை செலுத்துவார்கள் என காலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளைய தினம் குருபூஜையில் கலந்து கொள்வார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்களும் நாளை பசும்பொன் செல்லும் நிலையில் உதயநிதி ஸ்டாலினும் செல்கிறார்..