தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. பொது மக்களின் தேவைக்காக நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திங்கள் முதல் சென்னையில் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றும், 10,000 வியாபாரிகளுக்கு பாஸ் வழங்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மேலும் தீவிர தூய்மைப்பணி திட்டத்தை பயன்படுத்தி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக பராமரிக்க அலுவலர்கள் அனைவரும் ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.