தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் நடைபெற இருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.
இருந்தாலும் நடப்பு கல்வியாண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் தற்போது உருமாறிய புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பொது தேர்வு நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில், மே மாதத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.