சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என மத்திய கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பது பற்றிய அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 4 ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக பொதுத் தேர்வை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். ஜூலை 15ஆம் தேதி சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.