தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பயிர்கள் பெரும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.. அதுமட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதில் சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளது.. இந்நிலையில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகாலை சீரமைக்க 300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் மழையில் முழுமையாக சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும்.சேதமடைந்த குறுவை, கார், சொர்ணவாரி பயிர்கள், முழுமையாக சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்ய ஏதுவாக ஹெக்டர் ஒன்றுக்கு 6,038 மதிப்பில் இடுபொருள் தரப்படும்.. இடுபொருட்கள் – குறுகிய கால விதை நெல் 45 கிலோ, நுண்ணூட்ட உரம் 25 கிலோ, யூரியா 60 கிலோ, டிஏபி உரம் 125 கிலோ வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர் சேத விவரங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.. அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.