அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான வழக்கில் அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.
ஜூலை மாதம் 11ஆம் தேதி ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு தரப்பினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் கற்கள், கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு மோதிக்கொண்ட நிலையில், இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில், இபிஎஸ் தரப்பில் இருந்து சிவி சண்முகம் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும், அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கும் என மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றத்தை நாடி இருந்தனர்.
இதனால் இந்த வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு செப்டம்பர் 7ஆம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் முதல் முறையாக விசாரணை தொடங்கி இருந்தனர். நேரடியாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய சிசிடிவி பதிவுகள், ஆவணங்கள், கணினியில் இருக்கக் கூடிய தரவுகள், எந்தெந்த பொருட்கள் காணாமல் போயுள்ளது என அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விரிவான பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்த சூழலில் அதிமுக அலுவலக மேலாளராக இருக்கக்கூடிய மகாலிங்கம் அவருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி, இன்றைய தினம் காலை 11 மணியளவிற்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்த, சூழலில் சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்கறிஞர் பாபு முருகவேல் என்பருடன் நேரில் ஆஜராகி இருக்கிறார் மகாலிங்கம். இவரிடம் தற்போது விசாரணையை தொடங்கி இருக்கின்றார்கள்.
மேலும் சிபிசிஐடி போலீஸ்சார் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்து இருப்பதாகவும், அந்த கேள்விகளின் அடிப்படையில் மகாலிங்கத்திடம் பல்வேறுகோணத்தில் விசாரணை நடைபெறும் எனவும் தெரியவந்திருக்கிறது. இந்த விசாரணையானது ஒரு மணி நேரத்துக்கு மேலாக செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.