துறைமுகம் தொகுதியில் வடமாநிலத்தவர்கள் கள்ள ஓட்டுப்போட வந்துள்ளதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது. அதன்படி வாக்காளர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காலை 7 மணிமுதல் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் துறைமுகம் தொகுதியில் பாஜகவுக்கு கள்ள ஓட்டு போட சவுகார் பேட்டையில் இருந்து 100 பேரை அழைத்து வந்ததாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஓட்டுப்போட்டு வந்துள்ளோம். இப்போது எங்களுக்கு ஓட்டு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவரை இங்கு வராத வடமாநிலத்தவர்கள் ஓட்டுப்போட வந்துள்ளனர் என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.