வங்க கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கும். அதன்பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக குறையும். மேலும் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் இடையே புயல் கரையை கடக்கும். அதுமட்டுமன்றி மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.