உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் இச்சிபுத்தூர் கிராமம் 8வது வார்டு வாக்காளர் பட்டியலில் 120 பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறது, எனவே புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வாக்காளர் பட்டியலில் தவறுகள் நடப்பது வழக்கமான ஒன்றுதான்.. அதனை நீக்கிவிட்டு புதிய பட்டியலை தயார் செய்து நடத்த வேண்டும்.. அதற்காக 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல என்று கூறி இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர்.
மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.