தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து உள்ளது. நேற்று மாலை முதல் தற்போது வரை பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.