காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி சென்ற வாகனம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் விபத்துக்குள்ளானது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அப்போது டெல்லியில் அத்துமீறி நுழைந்த விவசாயிகளை போலீசார் கடுமையாக தாக்கியதால் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் டெல்லி முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளும், உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி சென்றுள்ளார். அப்போது அவர் சென்ற வாகனம் எதிர்பாராதவிதமாக உத்திரப்பிரதேச மாநிலம் ராம்பூர் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.