காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்பது விவசாயிகளின் கோரிக்கை. இதற்காக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் பலநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதனடிப்படையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த வாரம் அறிவித்தார். டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான இந்த அறிவிப்பை சட்டமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனிடையே முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
அதில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு தொடர்பாக கொள்கை முடிவு எடுப்பது, தேசிய குடிமக்க பதிவேட்டில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கும் பொருட்டு கொள்கை முடிவெடுக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் தாக்கல் செய்வதற்கும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ளார். இந்த சட்ட முன்வடிவு மூலம் ஹைட்ரோகார்பன், மீத்தேன், மென்களிக்கல் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களின் ஆய்வு, துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு உருக்காலை, செம்பு உருக்காலை, அலுமினிய உருக்காலை, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தலுக்கு தடை வித்திக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளுக்கும் இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் வருகிறது. காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களுக்கு தடை பொருந்தும் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களுக்கும் இந்த தடை பொருந்தும் என கூறப்பட்டு இருந்தது. வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது .