தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு அதிகமாக இருந்ததன் காரணமாக கடந்த 14ஆம் தேதி சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறி, பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றில் இருந்து ஸ்டாலின் முழுமையாக குணமடைந்தார். நாளையுடன் கொரோனா தனிமைப்படுத்துதல் காலம் நிறைவடைவதால், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஒருவாரத்திற்கு வீட்டில் இருந்து ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.