தமிழகத்தில் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என கூறியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, பள்ளிகளில் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.