தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் 50 மதிப்பெண்களுக்கு மாத இறுதியில் அலகு தேர்வு நடத்த வேண்டும். மாணவ மாணவிகளுக்கு தனித்தனி வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி கல்வி தொலைக்காட்சி, ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து தேர்வு நடத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.