கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 31) தீர்ப்பளிக்க இருந்தது. அதாவது இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசின் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் சென்ற வருடம் நவம்பர் 1ஆம் தேதி உள்ஒதுக்கீடுக்கு வகை செய்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி சட்டம் செல்லாது என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பாமக, தமிழ்நாடு அரசு, பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இவ்விவகாரத்தை டிசம்பர் 15ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது. இது குறித்து எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் போன்றோர் அடங்கிய அமர்வு தொடர்ந்து விசாரித்தது. தமிழ்நாடு அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் மனு சிங்வி, ராகேஷ் துவிவேதி, பி.வில்சன், முகுல் ரோத்தகி, மனுதாரர் சி.ஆர். ராஜன் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், பா.ம.க தரப்பில் மூத்த வழக்குரைஞர் எம்.என்.ராவ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அதன்பின் எதிர்மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் கோபால் சங்கரநாராயணன், ராஜீவ் தவண், எஸ்.நாகமுத்து, ஆர்.பாலசுப்ரமணியன், கே.எம்.விஜயன், வி.பிரகாஷ் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
அதனை தொடர்ந்து இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் அமர்வு கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி ஒத்திவைத்து இருந்தது. அதுமட்டுமல்லாமல் வழக்கில் தொடர்புடைய தரப்பினரிடம் எழுத்துப்பூர்வ ஆவணங்கள் ஏதும் இருந்தால் 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு தந்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உள்இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அமர்வு, வன்னியருக்கான 10.5% உள்இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பளித்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.