9 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணைய தலைவர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதி 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.. அப்போதைய அதிமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இதனையடுத்து தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் செப். 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தேர்தலை நடத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.. இருப்பினும் உள்ளட்சி தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய தலைவர் பழனிகுமார் பேட்டியளித்தார்.. அப்போது அவர், உடனடியாக அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிமுறை அக்டோபர் 16 வரை அமலில் இருக்கும்.. இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.. 9 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 22ம் தேதி வரை நடைபெறும். செப்.,23ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும்.. 25-ம் தேதி வேட்புமனு திரும்பப் பெறலாம் என்று கூறினார்.
மேலும் அவர், “ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என்று தெரிவித்தார்..