உலக நாடுகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். நேற்று 2-வது நாளாகவும் போர் நீடித்தது. இதில், ரஷ்ய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன.
ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை இலக்காக கொண்டு அழித்துள்ளோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும், உக்ரைன் ராணுவ தாக்குதலில், ரஷ்ய படையை சேர்ந்த 1,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் ராணுவம் இன்று அறிவித்துள்ளது.
ஆனால், ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு பற்றி ரஷ்ய ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், உக்ரைனின் கார்கிவ் நகருக்கு வெளியே ரஷ்ய ராணுவ படையை சேர்ந்த, பல ராக்கெட்டுகளை ஒரே சமயத்தில் ஏவும் திறன் வாய்ந்த வாகனம் ஒன்று அழிக்கப்பட்டும், அதன் பக்கத்தில் ஆடை முழுவதும் பனி படர்ந்தபடி வீரர் ஒருவரின் உடல் கீழே விழுந்து கிடப்பது போல புகைப்படமும் வெளியானது.
இந்த நிலையில் 3500-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று குவித்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் சிறைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும், 14 ரஷ்ய விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 102 பீரங்கிகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.