6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியிலேயே பயின்ற மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்தால் கல்வி கட்டணத்தை அரசு வழங்கும் என்று தெரிவித்திருந்த நிலையில், தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்தால் தமிழக அரசே கட்டணத்தை செலுத்தும் என்று தெரிவித்திருந்தது. அரசு பள்ளி மாணவர்கள் இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும், அவர்கள் படிப்பிற்கு வறுமை ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த அறிவிப்பு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வமான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கல்வி கட்டணத்தை மாநில அரசு செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் கல்வி கட்டணம் உள்ளிட்ட சான்றிதழோடு ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்களை ஆய்வு செய்து தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்திற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.