7 நாட்களில் புதிய கட்சியை தொடங்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் புதிய பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதிலும் சில கட்சிகள் தொகுதி பங்கீடு பற்றிய தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் மாநிலம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்துவருகின்றது. இந்நிலையில் ஏழு நாட்களில் புதிய கட்சியை தொடங்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் புதிய பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய கட்சியை பதிவு செய்ய 30 நாட்கள் தேவை என்ற கால அவகாசத்தை ஏழு நாட்களாக தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது. இந்த உத்தரவு சட்டப்பேரவை நடைபெற உள்ள தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும் பொருந்தும். கட்சி தொடங்குவது பற்றி நாளிதழில் விளம்பரம் அளித்து, அதனை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.