உசிலம்பட்டி அருகே பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை தலையணையால் அமுக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டி அப்பகுதியில் சின்னசாமி மற்றும் சிவப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 8 மற்றும் மூன்று வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி சிவ பிரியாவுக்கு அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர்கள் வீடு திரும்பினர். குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறிய நள்ளிரவு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் குழந்தையின் முகத்தில் காயங்கள் இருப்பதை கண்ட மருத்துவர், உடனே போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. தங்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அந்த தம்பதி குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன் பிறகு குழந்தையை தலையணையால் அமுக்கி மூச்சுத்திணற செய்து பாட்டி நாகம்மாள் கொலை செய்துள்ளார். அதன் பிறகு யாருக்கும் இது தெரிய கூடாது என்பதற்காக, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நாடகமாடி உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாட்டி நாகம்மாள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.