தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை இன்று மதியம் முதல் மீண்டும் தொடங்குகிறது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. புயலால் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் புயல் கரையை கடந்ததால் இன்று மதியம் 12 மணி முதல் ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை வழக்கம்போல் இயக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புயல் காரணமாக 24 ஆம் தேதி மதியம் ஒரு மணி முதல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் பேருந்து சேவை தொடங்க உள்ளது.