தமிழகத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். அதில் முடிவு எடுக்கப்பட்டு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.