இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பு அரணாக இருக்குமென்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2_ஆவது நாள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.இதில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இந்த பேரவைக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்றுதான் திமுக இன்று காலை வெளிநடப்பு செய்தது. அதற்குப் பின்னர் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக பேரவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதற்க்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதிலளித்து பேசினார்.
அப்போது அவர் பேசும்போது தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது நீதிமன்ற நீதிபதி வழிகாட்டல் படி தான் அசாம் மாநிலத்தில் மட்டும் அமுல்படுத்தியுள்ளார்கள். வேறு மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வரவில்லை என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேரவையில் தெரிவித்தார்.
மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதை குறிப்பாக அதிமுக அரசுதான் முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவிக்கும். NRC தொடர்பாக எந்தவிதமான அறிவிப்பும் வந்திருந்தாலும் அதிமுக அரசை எதிர்க்கும். தமிழகத்தில் இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாகவும் , இது தொடர்பான எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.