நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து அனைத்து மாநில அரசுக்கும் உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும்.
நிபந்தனைகளை பின்பற்றி மாநில மற்றும் சிபிஎஸ்இ திட்டத்தின் கீழ் தேர்வு நடத்தலாம் என உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் தெர்மல் சோதனை, சானிடைசர், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்ல ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் உடல் பரிசோதனை செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.